Tuesday, June 17, 2008

தெளிந்தேன் தும்பி...!

கான மழை கவி நாவில் - பெய்யக்
காரணமாய் இருக்கின்றாய்.
பாண மழை புவிமீதில் - பாய்வதைப்
பாராமல் இருப்ப தேனோ?
நாண மலர் தலை கவிழ்ந்தால் - அதை
நாணாது நுகர்கின்றாய்!
ஊன மலர் உதிர்ந்து விட்டால் -அதை
உணராது பறப்ப தேனோ?
மோனம் கொண்டு விறந்தாலும் - உன்னை
ஏனேன்று கேட்டுத் தெளிந்தேன் தும்பி...!



நாற்புறமும் கடல்நடுவே - என்றன்
நாவறண்டு போகுதையா
பாற்பொங்கல் குவிந்திருந்தால் - அதை
பகிர்ந்துண்ண நோகுதையா
போர்ப்புறத்தில் படை நடுவே - மெய்யில்
போகத்தீ வேகுதையா
நூற்புலவர் சபை நடுவே - முகம்
நிலம் நோக்க லாகுதையா
ஊற்றுண்டு மணல் நடுவே - நூற்தாகம்
ஊறுவது எப்போதென்று தெளிந்தேன் தும்பி...!

நீள் வானில் விளையாடும் - இந்
நிலந்தனிலே சுமையானேன்!
கார் கால மழையினிலே - வரும்
புயர் காற்றின் நிலையானேன்!
மட மோகம் மலர்கையிலே -மனம்
மகிழ்ந்தாடும் வண்டானேன்!
விட நாவில் விளையாடும் - ஒரு
திடமான சொல்லானேன்!
மனப் போராட்ட காரணத்தை - உடன
போக்குகின்ற வழி கேட்டுத் தெளிந்தேன் தும்பி...!

கோப மென்றால் நா வடக்கு - எழிற்
கோல மென்றால் மோகம் வரும்!
மோக மென்றால் விழி யடக்கு - வழித்
தாப மென்றால் போகம் வரும!
போக மென்றால் மன மடக்கு - இளத்
தேக மென்றால் காமம் வரும்!
காம மென்றால் புல னடக்கு - இவை
நிகழு மென்றால் யோகம் வரும்!
யோகா மென்றால் தலை வணங்கு - நீ
யோகியாவாய் என்றென் றுரைப்பாய் என தெளிந்தேன் தும்பி...!

No comments: